பள்ளி கழிவறையில் 1ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்.. திமுக பிரமுகருக்கு சொந்தமான பள்ளி முற்றுகை!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2025, 11:27 am
திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள திமுக மாநில நிர்வாகியின் தனியார் பள்ளியில் (கதிரவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி) நேற்று பள்ளிக்கு சென்ற 1 ம் வகுப்பு சிறுமி கழிவறைக்கு சென்ற போது துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் மாநில இளைஞர் ஜெய் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பெற்றோர் புகாரை தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பள்ளி தரப்பில் முறையான பதில் அளிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கே வி ஆர் நகர் காவல் நிலைய போலீசார் பெற்றோர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பள்ளிக்கு குழந்தைகளை விட வந்த பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை திருப்பி அழைத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளி மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
