‘நாலு கால் கரடி இல்ல.. ரெண்டு கால் கரடி‘ : கரடி தாக்கி பலியான கூலித்தொழிலாளியின் சம்பவத்தில் ஒரு வருடம் கழித்து திடீர் திருப்பம்!!

22 July 2021, 8:14 pm
Bear Murder Case arrest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பேச்சிப்பாறை மலை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கரடி கடித்து உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் கரடி தாக்கியது போல கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி அடுத்த பேச்சிப்பாறை வலியமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். பழங்குடி இன மக்களை சார்ந்த இவர் அப்பகுதியில் விவசாய தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும் இவர் ஆழத்தெங்கு எனப்படும் மரத்தில் கள் எடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மணலோடை பகுதியை சேர்ந்த சிவராமன், மனோகரன், மணிகண்டன் ஆகிய மூன்று பேருக்கும் சுரேசுக்கும் கள் இறக்குவது சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜுன் மாதம் கள் இறக்கும் தொழிலுக்கு சென்றவர் 3 நாட்களாக வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அவர் கள் எடுக்கச் சென்ற இளமூட்டுபாறை பகுதியில் உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் . இதனையடுத்து உறவினர்கள் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உறவினர்கள் விசாரித்ததில் கரடி தாக்கி இறந்ததாக மக்கள் பரபரப்பாக அப்பகுதியில் பேசப்பட்டது.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பரிசோதனையில் அவர் கரடி தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் குலசேகரம் காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் உமா மற்றும் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனலோடை பகுதியை சேர்ந்த சிவராமன், மனோகரன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவருடைய குதிகால்களை வெட்டியும் உடம்புகளை காயப்படுத்தியும் மக்கள் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு அங்கங்கே கீறல்களை ஏற்படுத்தி கரடி தாக்கியதாக புரளி கிளப்பியுள்ளதையும் ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து மூன்று பேரையும் இன்று குலசேகரம் போலீசார் கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மத்திய கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

Views: - 366

0

0