பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை… விசாரணையில் திக் திக்… திருச்செந்தூரில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan22 September 2025, 12:58 pm
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). எலக்ரிசனான இவர் தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரை அடுத்த தோப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றது. இதையடுத்து உயிருக்கு பயந்த பைக்கை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
இதற்கிடையில் அருகே இருந்த மரக்கடைக்குள் மணிகண்டன் புகுந்துள்ளார். ஆனாலும் விடாத அந்த மர்மகும்பல் மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை சராமரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஸ்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் சகோதரரர் மற்றும் அவருடன் சேர்ந்து 2 பேர் என மொத்தம் 3 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூரில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
