தொடர்ந்து சொல்லிட்டே இருக்கோம்… இதோடு நிறுத்திக்கோங்க ; தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
13 December 2023, 7:53 pm

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்மூலம், பசும்பால் லிட்டருக்கு ரூ.35லிருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை ரூ.44லிருந்து ரூ.47ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வின் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும், பால் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இது இல்லை என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளின் சார்பாக நாங்கள் முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை தமிழக பாஜக வரவேற்கிறது.

தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும் தமிழக பாஜக தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறது. முன்பைப் போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!