எதற்கும் தயாரா இருங்க.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…
Author: kavin kumar6 November 2021, 8:48 pm
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், 9-11-2021 அன்று வங்க கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது:- வரும் 9.11.2021 அன்று வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்குமாறும் சார்நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுமாறும் மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.மேலும், தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கவனமாக கண்காணித்து, ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள்.
24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொரோனா பெருந்தொற்றையே நாம் வெற்றிகரமாக சந்தித்து விட்டோம். கொரோனா காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நான் அறிவேன். தமிழ்நாடு வெற்றிகரமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பிற மாநிலங்கள் பேசி வருகிறது. வெளிநாடுகளில் கூட புகழ்ந்து பேசக்கூடிய அளவிற்கு நாம் பணியாற்றி இருக்கிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், அனைவருடைய கூட்டு முயற்சி தான் இதற்கு காரணம் என்று தெரிவித்தார். ஆனால் கொரோனா போல் அல்லாமல், வெள்ள பாதிப்பு குறித்து நமக்கநன்றாக தெரியும்.
கனமழை ஏற்பட்டால் எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்,உயிர்சேதங்கள் எப்படி ஏற்படும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது, இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். வெள்ளப் பாதிப்பிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே காணாமல், நீண்டக் கால நிரந்தர தீர்வுகளையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனாவை வென்றதைப் போல் இந்த பருவமழையும், புயலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்கள் அனைவரும் ஒத்துழைப்பும் வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். வடகிழக்கு பருவமழையில் நாளது தேதி வரையிலான இயல்பான மழைப்பொழிவு 2255 மி.மீ என்ற நிலையில், இன்று காலை நிலவரப்படி 917.59 மி.மீ பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 41 % கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பை விட 20 சதவீதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது. சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பத்தூர்,திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டு ஜனவரி முதல் 06.11.2021 வரை இயல்பான மழையளவான 706.0 மி.மீ.-விட 37 சதவீதம் கூடுதலாக 969.9 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 90 அணைகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, கரூர், திருப்பூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 அணைகள், நீர்த்தேக்கங்கள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது. 14138 ஏரிகளில், 7048 ஏரிகள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி (1726) மதுரை (939) தஞ்சாவூர் (550, புதுக்கோட்டை(510), திருவண்ணாமலை (378),
சிவகங்கை (346), தென்காசி (346), திருநெல்வேலி (305), காஞ்சிபுரம் (257), செங்கல்பட்டு (248), ராணிப்பேட்டை (213), விழுப்புரம் (191), கள்ளக்குறிச்சி (147) கடலூர் (131), திருவள்ளூர் (124) மாவட்டங்களில் உள்ள ஏரிகள் 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளன. நீரநிலைகளைட் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 9-11-2021 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
0
0