CM மனைவி வரும் போது கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியல ; டாஸ்மாக்கால் புலம்பும் அதிகாரிகள்… அதிமுக ஒன்றிய கவுன்சிலர் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 4:32 pm

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே அரசு மதுபான கடை இயங்கும் சாலையில் முதல்வரின் மனைவி வரும் போது கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் புலம்பியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், பேசிய திருநகரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பேசியதாவது:- மங்கைமடம் பகுதியில் அதிமுக ஆட்சியின்போது ஒதுக்குப்புறமாக இருந்த அரசு மதுபான கடையை அகற்றிவிட்டு, தற்போது மங்கைமடத்தில் சீர்காழி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.

இதனால் தினந்தோறும் அதிகப்படியான விபத்துகளும், வாகன நெரிசல்களும் ஏற்படுகிறது. இப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தமிழக முதல்வர் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வரும்போதும், போகும்போதும் கூட மதுபான கடை இருக்கும் சாலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு அதிகாரிகளே புலம்பும் கேவலமான நிலையில், அரசு மதுபான கடை இங்கே இயங்கி வருகிறது.

எனவே, உடனடியாக அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மதுபான கடையினால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிப்பதற்காக மின்மோட்டார் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களும் அரங்கேரி வருவதாகவும், எனவே இப்பகுதியில் உள்ள மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?