வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை சந்தித்த எம்பி அருண் நேரு : மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 8:04 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி அருண்நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி அருண்நேரு தொட்டியம் ஒன்றியம் திருஈங்கோய்மலை கிராமத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி. திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள போகர் சன்னதிக்கு முன்புறம் இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் காட்டுப்புத்தூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றில் நிரந்தர குரம்பு அமைப்பதற்கு உரிய நிதியை ஒதுக்கிடவும், அது தொடர்பான பணிகளை விரைந்து செய்து தரவும் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

மேலும் 100 நாள் வேலைத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக 100 நாள் வேலைத்திட்ட பணிகள் இல்லாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே 100 நாள் வேலை திட்டத்தை அதே தரத்துடன் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை வைப்பேன்.

இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை உங்கள் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பது எனது கடமை என்று பேசினார். மணமேடு, கொளக்குடி, முள்ளிப்பாடி, காமலாபுரம், தொட்டியம், பாலசமுத்திரம், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட தொட்டியம் தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து எம்பி அருண்நேரு வாக்களித்தமைக்கு நன்றி கூறினார். கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!