குப்பை கூடைகளுடன் மாமன்றத்துக்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள்.. எடுக்காத குப்பைக்கு எதற்கு வரி? பதாகைகளுடன் எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 2:41 pm

குப்பை கூடைகளுடன் மாமன்றத்துக்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள்.. எடுக்காத குப்பைக்கு எதற்கு வரி? பதாகைகளுடன் எதிர்ப்பு!

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகிய 3 பேரும் கைகளில் குப்பை கூடைகளுடன் வந்தனர்.

தனியாருக்கு குப்பை எடுக்க விடப்பட்ட டென்டரை ரத்து செய்ய வேண்டும் , வீடு வீடாக முறையாக குப்பைகள் எடுக்காத நிலையில் எதற்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அவர்கள் ,மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேட்டியளித்த கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் , 2 மாதங்களுக்கு பின்பு இன்று மாமன்ற கூட்டம் நடத்தப்படுகின்றது எனவும், தனியாருக்கு 170 கோடி ரூபாய் மதிப்பில் குப்பை எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் குப்பைகளை ஓழுங்காக எடுப்பதில்லை எனவும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது எனவும் குற்றம்சாட்டினர்.

குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை எனில் கட்சி தலைமை அனுமதி பெற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

டெண்டர் விடப்பட்ட பின்னர் குப்பை எடுக்க போதுமான வாகனங்களை தனியார் நிறுவனம் பயன்படுத்துவதில்லை எனவும் யாரோ ஒரு தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகின்றது எனவும் குற்றம் சாட்டினர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 109 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 102 வது பொருளாக , மாநாகராட்சி பகுதியில் தொழில், வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினா்.

இதனை அடுத்து அந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.இதே போல சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாகவும் அணையின் நீர்மட்டத்தை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மாமன்ற உதுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பேசிய மேயர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், அமைச்சரிடம் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் மேயர் கல்பனா தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!