200 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்.. பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த எஸ்பி வேலுமணி உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2025, 1:59 pm

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 7 ம் தேதி துவங்குகிறார்.

அன்றைய தினம் மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். அதை தொடர்ந்து 8ம் தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஒட்டி கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்கள் மத்தியில் அவர் வருகை தொடர்பாக பிரச்சாரம் செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டன.

இதனை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சாரத்தை 2 நாட்கள் நடத்த உள்ளதாகவும் அதில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்வார்கள் என்றும் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வார் என்றும் குறிப்பிட்டார்.

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை மாவட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்.

ஏனென்றால் கோவை மாவட்டத்திற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா போன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான திட்டங்களை செய்துள்ளார் என்றும் கூறியதுடன்,அவரது 5 ஆண்டு கால ஆட்சியில் 50 வருடங்களில் நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சியில் அமைவது உறுதி என்றும் தெரிவித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு தான் மாவட்ட செயலாளராக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சூழலில் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகள் வரை வெற்றி பெற்றதாகவும் அதேபோன்று கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமியும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்றும் 2026ல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை? 
  • Leave a Reply