நடிகர் அஜித் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல்.. உடனே ஆறுதல் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
Author: Udayachandran RadhaKrishnan8 March 2024, 4:23 pm
நடிகர் அஜித் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல்.. உடனே ஆறுதல் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென்று நேற்று அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் அஜித் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் மருத்துவமனையல் அஜித் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார்.
இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நடிகர் அஜித்திற்கு காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி (வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
அதே போல நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும், இதை உறுதிப்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் அஜித்துக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் அஜித் நலம் பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.