திமுகவைப் பாராட்டிய தேமுதிக.. கூட்டணியில் நடப்பது என்ன? உண்மை இதுதான்!

Author: Hariharasudhan
6 March 2025, 9:41 am

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது” என, நேற்று தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறினார்.

இது அனைத்துக் கட்சிகளைப் போன்ற ஆதரவு பேச்சுதான் என எடுத்துக் கொண்டாலும், இதுநாள்வரை திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தேமுதிக, தற்போது திமுகவைப் பாராட்டியிருப்பதைப் பார்க்கும்போது, சற்று தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணியையும் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், நேற்று முன்தினம் சேலம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படுகிறதா எனக் கேள்வியெழுப்பப்பப்பட்டது. அதற்கு, “ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யார் யாரோச் சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம்.

Edappadi Palaniswami

தேர்தலில் என்ன வெளியிட்டோமோ, அப்படித்தான் நடந்து கொள்கிறோம்” எனப் பதிலளித்தார். இதற்கு எடப்பாடியின் பதில் மட்டுமே காரணமல்ல, அதற்கு முன்னதாக, அதாவது பிப்ரவரி 12ம் தேதி ராஜ்ய சபா சீட் குறித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்ய சபா பதவி.

ராஜ்ய சபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பில் யார் ராஜ்ய சபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தது தான், எடப்பாடியின் பதில், இளங்கோவனின் பாராட்டு என அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

அது மட்டுமல்லாமல், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த அன்றே, விஜயகாந்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், ‘சத்தியம் வெல்லும் நாளை நமதே’ எனப் பதிவிடப்பட்டு, பின்னர் உடனடியாக அது நீக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜ்ய சபா இடம் குறித்த இபிஎஸ்சின் பதில், அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசலை உண்டாக்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில்தான், இளங்கோவன் இப்படி பேசியுள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், பிரேமலதாவைச் சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!