உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்: 27 நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்த டிரைவருக்கு குவியும் பாராட்டு

11 October 2020, 10:19 pm
Quick Share

கோவை: உயிருக்கு போராடிய பிறந்த பச்சிளம் குழந்தையை அன்னூரில் இருந்து கோவைக்கு 27 நிமிடத்தில் கொண்டு வந்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

வட மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஷாஜகான்-மாமுனி. இவர்கள் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கருவலூர் தனியார் நூல் மில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நம்பியூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சிறுநீரக பிரச்சனை இருந்ததால் சிறுநீர் கழிக்க முடியாமல் குழந்தையின் வயிறு உப்பியது. அபாய கட்டத்தில் இருந்த குழந்தையை பார்த்து பதறிய பெற்றோர் உடனடியாக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸ் குழந்தையை கொண்டு செல்ல நாடினர். கால தாமதம் ஆனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உடனடியாக கோவைக்கு செல்ல சம்மதித்தார். பின்னர் உடனடியாக குழந்தை அபாய நிலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் பரபரப்பான அன்னூர் கோவை நெடுஞ்சாலையில் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் சாலையில் கவனமாக வேகத்துடன் ஆம்புலன்சை இயக்கி 27 நிமிடத்தில் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 35

0

0