கீழடியில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுப்பு : ஆச்சிரியம் தரும் அகரம் அகழாய்வு பணி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2021, 6:12 pm
Keezhadi - Updatenews360
Quick Share

திருப்புவனம் : கீழடி அருகே அகரம் அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி, கொந்தகையில் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அகரத்தில் இருந்து உறைகிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைபிடிப்பான் கருவி, விலங்கு உருவ பொம்மை, தலையலங்காரத்துடன் கூடிய பெண் பொம்மை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. தற்போது காதுகளில் அணியும் தங்க அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு அணிகலன் அறுங்கோண வடிவிலும், நடுவில் ஒரு துளையும் அதனை இணைப்பதற்கு வசதியாக குச்சி போன்ற அமைப்புடனும் உள்ளது. மற்றொரு அணிகலன் தங்க குண்டுபோல் காணப்படுகிறது. இரண்டு அணிகலன்களையும் கோர்த்து கழுத்தில் அணியும் மணியாகவோ, காதணியாகவோ அக்கால பெண்கள் அணிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

செப்டம்பர் மாதத்துடன் அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வில் தற்போது அகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது.

Views: - 308

0

0