கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!

Author: Hariharasudhan
4 February 2025, 11:04 am

குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ.16,302 கோடி. இந்த நிலையில், வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ.4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.

Annamalai questions on Education loan cancels by TN Govt

தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்… அவமானத்தால் விதியை மாற்றி எழுதிய கணவன்!

உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!
  • Leave a Reply