கொஞ்சம் ஓவரத்தான் போயிட்டாரு போல.. சீமானுக்கு அண்ணாமலை கேள்வி!

Author: Hariharasudhan
8 February 2025, 7:22 pm

பெரியாரால்தான் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும்.

நிச்சயம், ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம் தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகம் இல்லாத தேர்தல். என்னைப் பொறுத்தவரை, வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விட, மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாகப் பார்க்கிறோம்.

ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்றுதான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் அவ்வளவு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை.

Annamalai about Seeman Periyar speech affect in Erode Elections 2025

அதேபோல், பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரைத் தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்றால், அது நிச்சயம் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. பெரியாரைப் பிடித்தவர்களும் இருக்கின்றனர், பெரியாரைப் பிடிக்காதவர்களும் இருக்கின்றனர்.

அதற்காக வாக்கினை மாற்றிப் போடும் அளவிற்கு சக்தி இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன்வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

திமுகவினருக்கு அரசியல் தெரியவில்லை: அதனால் பெரியாரைப் பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றிப் போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைத்தான் ஈரோடு உணர்த்தி உள்ளது. பெரியாரைக் கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால்தான் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் கூறுவேன்.

இதையும் படிங்க: Erode Election Results: டெபாசிட் இழந்த நாதக.. நோட்டா முந்தியது எப்படி?

யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால், திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவீதம், பெரியாரை எதிர்த்துப் பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை விட 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 23 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று, டெபாசிட்டும் இழந்துள்ளார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!