’பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை’ – துரைமுருகனுக்கு அண்ணாமலை தடால் பதிலடி!

Author: Hariharasudhan
13 January 2025, 10:00 am

பெரியார் குறித்து சீமான், அண்ணாமலையின் பேச்சுக்கு ‘பிறப்பை’-க் கொண்டு அமைச்சர் துரைமுருகன் பதில் கூறிய நிலையில், அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இது தொடர்பாக பேசுகையில், “பெரியாருக்கும், நிகழ்கால தமிழகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இவர்கள் எப்போதோ கட்டமைத்த ஒரு பிம்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

ஒரு பலூனை எவ்வளவு ஊதினாலும் அது ஒருநாள் உடையத்தான் போகிறது. முரசொலி 1962 பொங்கல் மலரில், ‘பெரியாரை கேளுங்க?’ என்ற ஒரு கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அதைப் படித்தால் அருவருப்பாகிவிடும், ஆபாசமாகப் போய்விடும். சீமான் பேசியிருக்கிறார், நாங்கள் பேச விரும்பவில்லை.

பெரியாரைப் பற்றிய எங்கள் பார்வை, சிந்தனை என்பது மாறவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை இருக்காது. கோயிலுக்கு வெளியே ஆபாசமாக என்ன பொறித்து வைத்திருக்கிறார்களோ, அவை அகற்றப்படும். நான் பெரியாரைப் பற்றி பேசுவதால் என் பிறப்பைப் பற்றியும் சந்தேகப்படுகிறார் துரைமுருகன்.

Annamalai about Duraimurugan

அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும். நான் ஒரே அப்பா, அம்மாவுக்குத் தான் பிறந்தேன். விவசாயம் செய்கின்ற குடும்பத்தில் தான் பிறந்தேன். அதிலும் மாற்றுக்கருத்து இல்லை. கிராமத்தில் தான் பிறந்தேன். அதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. இதுவரை ஊழல் எதிலும் செய்ததில்லை, அதிலும் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!

அமலாக்கத் துறையினர் என் வீட்டுக்கு கடப்பாரை எடுத்துக் கொண்டு வந்து ரெய்டு செய்யவில்லை. ரெய்டு அடிக்கும் போது, பையன் துபாயில் போய் உட்கார்ந்திருக்கும் அளவுக்கான ஒரு பையனை நான் பெற்றெடுக்கவில்லை. அதிலும் எனக்கு சந்தேகமில்லை. அதையெல்லாம் தாண்டி பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திக, திமுக, தபெதிக உள்பட பல்வேறு பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம், சீமான் பேசியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், “பெரியார் பற்றி அவதூறு பேசுகிறவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!