நாளை வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: போக்குவரத்து கழகம் அறிவிப்பு?…

24 February 2021, 1:36 pm
Diwali Spl Bus - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர். இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. கூறியதாவது,

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வு தந்திருக்க வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு தரப்படாதது ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டிலும் அரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

tn bus - updatenews360

இதுவரை சுமார் 8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளில் கிடைப்பதில்லை. இந்த ஆட்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பஸ்கள் உள்ளது. இதில் 15 ஆயிரம் பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. 7 ஆயிரம் பஸ்கள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை முதல் கட்டாயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். சுமார் 1 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. அண்ணா தொழிற்சங்கம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Views: - 48

0

0