வெறும் பேட்ஜ் வொர்க்… முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் குறித்து அண்ணாமலை கடும் பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 6:58 pm
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜவுளி பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 40 நாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் ஜவுளி ஏற்றுமதி முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்து, தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் திமுக அரசு செய்யும் ‘பேட்ச் வொர்க்’ போன்ற நடவடிக்கைகளுக்கு மாறாக, மத்திய அரசு வரி விதிப்பு விவகாரத்தில் ஏற்கனவே தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. அதேநேரம், எந்த காரணமுமின்றி உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
