தொட்டதுக்கு எல்லாம் லஞ்சம்… லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை : 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. சார் பதிவாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
5 November 2022, 8:59 am
Quick Share

குமரி : கன்னியாகுமரி இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தராக பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து, அந்த நாளில் மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பு சார்பதிவாளர்களாக நியமித்து லஞ்சம் பெற்றுகொண்டு முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்து வருவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்தது.

இது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பத்திரபதிவு துறை டிஐஜி ஆகியோருக்கு புகார் அனுப்பி வந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளர் பத்திரபதிவு செய்வதாகவும், தொடர்த்து பதிவுக்கான ஆன்பதிவு டோக்கன்களை நிறுத்தி வைத்துவிட்டு பொதுமக்கள் பத்திரபதிவு செய்யமுடியாத நிலையில் அந்த டோக்கன்களை அதிகாரிகளே தங்களுக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வழங்கி முறைகேடாக பத்திரபதிவுசெய்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாலையில் திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 4,52,800 மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சுவாமிதோப்பு அருகே விஜயநகரி பகுதியை சேர்ந்த பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர் மற்றும் இடைதரகர்கள் 6 பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 732

0

0