லாரி அதிபரிடம் லஞ்சம் வாங்கிய நில வருவாய் ஆய்வாளர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!

Author: Udhayakumar Raman
7 December 2021, 9:24 pm
Quick Share

திருப்பூர்: லாரி அதிபரிடம் பொங்கலூர் நிலவருவாய் ஆய்வாளர் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் – பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட, பொங்களூரில் உள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், கோவையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நில வருவாய் ஆய்வாளராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கலலூரை அடுத்த அழகுமலை பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெயரில் டிப்பர் லாரிகளை வைத்து உள்ள முருகேஷ் என்பவரிடம் பொங்கலூர் வழியாக அவரது லாரிகள் செல்ல வேண்டுமென்றால் மாதா மாதம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென பொங்கலூர் நில வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் கட்டாயப்படுத்தி கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாரி அதிபர் முருகேஷ் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் பொங்கலூரிலுள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு, லாரி அதிபர் முருகேசனுடன் சென்றனர். அங்கு வைத்து ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணத்தை முருகேஷ் அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக செந்தில்குமாரை பிடித்தனர். மேலும் லஞ்சப் பணமாக அவர் பெற்றுக்கொண்ட ரூ.25 ஆயிரம் மற்றும் கணக்கில் வராத மேலும் ரூ.45 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ. 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய செந்தில்குமார் வாரிசு சான்று,குத்தகை மண் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பலரிடமும் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அவருடைய வரவு,செலவு கணக்கு விபரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மற்றும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Views: - 552

0

0