நீதிமன்ற உத்தரவை மீறி மயானக் கட்டுமான பகுதிக்குள் சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் நுழைய முயற்சி : தடுத்த போலீஸ் மற்றும் மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 6:47 pm

கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று (14/06/2024) கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின்‌கடடிட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை‌ பெற்ற பின்னர்‌ ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார். மேலும் இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது

முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்‌ ஆய்வறிக்கையை கேட்டுள்ளது. இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!