அரசூரில் கால்நடைப் பண்ணை அமைக்க அரசு ஒப்புதல்..! குஷியில் கால்நடை விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
17 August 2021, 10:05 am
Quick Share

கோவை: கோவை மாவட்டம் அரசூரில் கால்நடைப் பண்ணை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையத்தில் கால்நடைத்துறைக்கு சொந்தமாக 14.61 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கோழி அபிவிருத்தி மற்றும் குஞ்சு பொறிப்பகம் (டாப்கோ) செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த டாப்கோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செயல்படாமல் பாழடைந்து உள்ளது. இவை தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

இந்த நிலையில் இந்த இடத்தை சீரமைத்து ஒருங்கிணைந்த கால்நடைப்பண்ணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் சத்திய குமார் மற்றும் கோகுல்நாத் ஆகியோர் இணைந்து பொது மக்களின் சார்பில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்தனர். அதே போல பல்வேறு துறைகளுக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை பதில் அளித்துள்ளது.

அதில் கூறியுள்ளதாவது “கால்நடை துறைக்கு சொந்தமான நிலத்தில் முற்றிலும் சீரமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் கால்நடை தீவன உற்பத்தி களம் அமைக்கலாம் என்றும், புகாரில் தெரிவித்துள்ள இடத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையாக மாற்றம் செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதால், குழு அமைத்து அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையாக மாற்றம் செய்ய ஆவணம் செய்யலாம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Views: - 362

3

0