திருச்செந்தூருக்கு போறீங்களா? யாரும் கடலில் இறங்க வேண்டாம் : காவல்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 5:19 pm
Tiru
Quick Share

திருச்செந்தூருக்கு போறீங்களா? யாரும் கடலில் இறங்க வேண்டாம் : காவல்துறை எச்சரிக்கை!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அது போல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் என்பது புயல், காற்றழுத்த தாழ்வு நிலை வரும் போதுதான் ஏற்படும்.

ஆனால் இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் ஏற்படுவது என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.

16 முதல் 23 வினாடிகளுக்கு ஒரு அலை வீதமும் 1.8 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் உருவாகும் என்கிறார்கள்.
இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இன்றி கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் குமரி கடலில் கூட யாரும் குளிக்க வேண்டாம் என அந்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் திருச்செந்தூரில் இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலில் யாரும் குளிக்கக் கூடாது என போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோடை விடுமுறை என்பதாலும் சிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.

கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Views: - 208

0

0