மதுபோதையில் தகராறு… விவசாயியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை : கோவையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 12:52 pm
Murder - Updatenews360
Quick Share

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேடூர் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது58). விவசாயி. இவரது மனைவி மாணிக்கம்(55). இவர்களுக்கு பிரபு, சரவணன் என 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சின்னசாமி மாந்தரைக்காடு என்ற பகுதியில் உள்ள தோட்டத்தில் பட்டி அமைத்து 70க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் சின்னசாமி, தனது மனைவியுடன் ஆடுகளை அருகே உள்ள வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

நேற்று காலையும், கணவன், மனைவி 2 பேரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அருகே உள்ள வனத்தில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர். பின்னர் மாலையில் பட்டிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆடுகள் பட்டிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சின்னசாமி தனது மனைவியுடன் சேர்ந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் ஆடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சின்னசாமி மனைவியுடன் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் சின்னசாமி அதே பகுதியில் உள்ள தனது உறவினரான அய்யசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சின்னசாமி, அவரது உறவினர்கள் அய்யாசாமி, குருந்தாசலம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சின்னசாமி தனது ஆடுகள் காணாமல் போனது குறித்து உறவினர்களிடம் கவலை தெரிவித்து பேசிகொண்டிருந்தனார்.

அப்போது உறவினர்கள் மேடூர் செல்வா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(28) என்பவர் தான் சிறு, சிறு திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக கூறி பேசினர். அந்த சமயம் அவ்வழியாக ரஞ்சித்குமார் வந்தார்.

இதனை பார்த்ததும் சின்னசாமி எழுந்து சென்று, ரஞ்சித்குமாரிடம் நீ தானே என் ஆடுகளை திருடினாய்? ஒழுங்காக எனது ஆடுகளை திருப்பி கொடுத்து விடு என கூறினார். ஆனால் வாலிபர் நான் திருடவில்லை என்றார். இருப்பினும் சின்னசாமி தொடர்ந்து வாலிபரிடம் ஆட்டை நீ தான் திருடினாய் என கூறினார்.

இதற்கிடையே தன்னை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சின்னசாமி மீது கடும் கோபத்தில் இருந்தார். அவரை கொல்ல முடிவு செய்த அவர், தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கொண்டு நள்ளிரவு 11 மணிக்கு அய்யாசாமியின் வீட்டிற்கு பின்புறம் வந்தார்.

அப்போது அங்கு சின்னசாமி தனது உறவினர்களான அய்யாசாமி, குருந்தாச்சலத்துடன் பேசி கொண்டிருந்தார். இதையடுத்து ரஞ்சித்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மறைந்து இருந்து சின்னசாமியை நோக்கி சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்த வேகத்தில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதை பார்த்து அய்யாசாமியும், குருந்தாசலம் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் சின்னசாமியின் குடும்பத்தினரும் ஓடிவந்தனர். அவர்கள் சின்னசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பொதுமக்கள் சேர்ந்து தோட்டத்திற்குள் மறைந்திருந்த ரஞ்சித்குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த சின்னசாமியின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து விவசாயியை துப்பாக்கியால் சுட்ட ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆடு காணாமல் போன தகராறில் ரஞ்சித்குமார் விவசாயியை சுட்டு கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இறந்த சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு காணாமல் போன தகராறில் விவசாயி சுட்டு கொல்லப்பட்ட சம்பம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 391

0

0