கிறிஸ்துவ, இஸ்லாமிய பண்டிகைகளில் திரைப்படங்கள் ரிலீஸாகாதது ஏன்…? தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா…? அர்ஜுன் சம்பத்தின் புது குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 8:50 am
Quick Share

தாராபுரம்: துணிவு படம் பார்க்கச் சென்ற போது உயிரிழந்த அஜித் ரசிகர்கரின் குடும்பத்திற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், கோட்டைமேடு உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் கொடி ஏற்ற விழாவில் கலந்துகொண்டு, பின்னர் கோட்டைமேட்டில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து தைத்திருநாளை முன்னிட்டு உழவர் தினமான நேற்று கோட்டைமேடு பகுதியில் பொங்கல் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:- தமிழகத்திலே வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்கள் ரெட் ஜெயின் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, ஓடிக்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் டாடா, பிர்லா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் முதலீடு செய்து கிடைக்கும் வருமானத்தை விடம அதிக அளவு வாரிசும துணிவு படத்தின் மூலம் ரெட் ஜெயின் மூவிஸ் சம்பாதித்துள்ளது. வாரிசு, துணிவு படத்திற்காக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் யார் பெரிது என மோதிக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் துணிவு பட முதல் காட்சியை கொண்டாடுவதற்காக சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு தமிழக அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அது தவறான கருத்து. உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் நிதி உதவி அளிக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாலையில் ஒரு காட்சியை உருவாக்கி பணம் சம்பாதித்துள்ளனர். அஜித், விஜய் ஒரு சினிமா நடிகர்கள். அவர்களுடைய படங்களை ரசிகர்கள் பொழுது போக்காக மட்டுமே பார்க்க வேண்டும். கமலஹாசன், எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோரின் காலங்களில் இருந்து மக்களின் மனதை ரசிகர்கள் என்ற போர்வையில் கெடுத்து வைத்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

பொங்கல் பண்டிகை தீபாவளி பண்டிகை அன்று புதிய படங்களை வெளியிட்டு தமிழர்கள் அனைவரும் திரையரங்குக்கு செல்ல வேண்டும் அல்லது அரசு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கை வைத்து சம்பாதித்து வருகின்றனர். கிறிஸ்துவ பண்டிகை, இஸ்லாமிய பண்டிகைகளில் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. ஆனால், தமிழர் பண்டிகை மட்டும் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இனி வரும் காலங்களில் தமிழர் பண்டிகைகளில் புதிய படங்கள் திரையிடக்கூடாது.
இந்த சினிமா கலாச்சாரம் மாற வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்து அறநிலைத்துறை விஐபி சாமி தரிசனம் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். சாமி பக்தர்கள் அனைவருக்கும் யார் முன்பு வருகிறார்களோ, அவர்களுக்கு இலவச தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் கட்டு, ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயம், கிடா முட்டு, கபடி, சிலம்பம் சுற்றுவது போன்ற விளையாட்டுகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். இதற்கு தமிழக அரசு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது, என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 458

0

0