பவன் கல்யாண், நயினார், அண்ணாமலையை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்க.. கமிஷ்னரிடம் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2025, 12:57 pm

மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பல முக்கிய முன்னணி தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தனர்.

குறிப்பாக மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது, மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த உத்தரவை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதனிடையே மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “மதத்தை அரசியல் கலந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பரப்புரையாக இந்த மாநாட்டை நடத்தி தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியதோடு முருக பக்தர்களையும் அவமானப்படுத்தி உள்ளனர்.

மாநாட்டில் மதவெறியை தூண்டும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் ஆகியோர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை, அரபிய மதம் வெளிநாட்டு மதம் என்றும் 2055ல் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் ஆதரித்து பேசியுள்ளனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே மதவெறியை தூண்டி, வெறுப்பை வன்முறையை விதைத்து தமிழ்நாட்டின் அமைதி வளர்ச்சியை சீர்குலைத்து நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியை தூண்டும் விதமாக பேசியதாகவும், மதுரையின் மதமல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் காடேஸ்வர சுப்பிரமணியன், முத்துக்குமார் புதிய தண்டனை சட்ட விதிகளின்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுரை மாநகர காவல்துறை நீதிமன்றத்தை அவதிப்பு செய்துள்ளது. நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுக்க வேண்டும், முருகன் இந்து என்றால் ஏன் ராமராஜ்யம் வைப்பேன் என்று சொல்கிறார்கள், எல்லோரையும் இந்து என சொல்கிறார்கள்.

H. ராஜா, நிர்மலா சீதாராமன், மோகன் பகவத் ஆகியோர் இந்து என்று சொல்லி எங்களோடு கறி சாப்பிடுவார்களா? H. ராஜா பூ நூலை கழட்டி விட்டு பேசுவாரா? நிர்மலா சீதாராமன் பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு இந்து என பேசட்டும், தமிழில் அரச்சனை செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றினார்களா? அண்ணா, பெரியாருக்கு இந்த மாநாட்டிற்கு என்ன சம்பந்தம்? இப்படி இழிவுபடுத்தி பேசியபோது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசாமல் செல்கிறார்கள்.

இதுபோல அவமானம் உண்டா? அவர் கட்சி தலைவர்களை இழிவு செய்கிறார்கள், பண்ணை என்ற பெயரை எடுத்துவிட வேண்டியது தானே? இதற்கு மேல் பாஜக கூட்டணியில் தொடர வேண்டுமா? கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனை அழைக்கவில்லை, கருவேப்பிலை போல் தூக்கி எறிந்துள்ளார்கள்.

திருமாறனுக்கும், ஜி. கே.வாசன், அன்புமணிக்கும் இதே நிலைமை தான், நாளை அதிகாரத்திற்கு வந்தால் H. ராஜா, நிர்மலா சீதாராமன், தான் பதவி ஏற்பார்கள் தவிர சூத்திரர்கள் யாரும் பதவி வகிக்க மாட்டார்கள் என்றார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!