‘ஏடிஎம் கார்டை கொடுங்கள் பணம் எடுத்து தருகிறேன்’: பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது

15 July 2021, 6:56 pm
Quick Share

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஏடிஎம் க்கு வரும் அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடித்து வந்த கொள்ளையனை தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த 50 வயதான மருதாயி என்பவர் தனது கணவர் ஓமன்ந்திடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துவர அனுப்பினார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கே நின்றிருந்த ஒருவரிடம் உதவி கேட்டபோது அவர் தான் கேட்ட பணம் ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு ஏடிஎம் கார்டை திரும்ப கொடுக்கும் பொழுது போலியான கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதனை அறியாத ஒமன்ந்த் அந்தக் கார்டை வாங்கி கொண்டு சென்றுவிட்டார் மீண்டும் 03.07.2021 அன்று பணம் எடுக்க வந்த போது, கார்டு செயல்படவில்லை என மற்றவர்கள் கூறியதால் வங்கியில் சென்று விசாரித்த போது,

இது உங்களது கார்டு இல்லை என்றும் உங்கள் கார்டின் மூலம் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் 65 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று வங்கியில் தெரிவித்தது. இதையடுத்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏடிஎம் கொள்ளையனை பிடிக்க டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை அமைத்தார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த ஆபேல்பாலா என்பவர் ஏடிஎம் முன்பாக சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததால் அவரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

அப்போது வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இதேபோல் பணம் எடுக்க தெரியாமல் வருபவர்களிடம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிப்பதே தனது வேலை என்பதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும், நான்கு போலி ஏடிஎம் கார்டையும் பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று வேடசந்தூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ரைட்டர் முத்துராமன் ஏட்டையா சிவா, ஏட்டையா மாதவன், ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக கொள்ளையனை அழைத்துச்சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே வேடசந்தூர் காவல்துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.

Views: - 151

0

0