ATM-க்கு வரும் நபர்களுக்கு குறி… நூதன முறையில் பணத்தை திருடும் நபர் : 140 ஏடிஎம் கார்டு பறிமுதல்

Author: Babu Lakshmanan
27 August 2022, 8:47 am
Quick Share

வேலூர் : ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள EB அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காவலர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு, எதையோ தூக்கி வீசியுள்ளார்.

சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் வீசியது ஏடிம் கார்டுகள் என்றும் தெரியவந்தது.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், கைதான நபர் வடுங்கன்தாங்கள் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழில் செய்யும் சுரேஷ்(36) என்றும், இவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை (எடுக்க தெரியாத நபர்களை) ஏமாற்றி போலியான மற்றும் காலாவதியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் அவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டு மூலம் பணத்தை தொடர்ந்து திருடி வந்ததாகவும், சித்தூர் பகுதியில் அதிக அளவில் இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாகவும், வேலூர், காட்பாடி, பாகயம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கூறினர்.

இதனையடுத்து, கைதான சுரேஷிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள், 35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் வேலூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 585

0

0