வீட்டில் புகுந்து மூதாட்டியை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 7:29 pm
Murder Attempt -Updatenews360
Quick Share

மதுரை : மேலூரில் வீட்டில் இருந்த 60 வயது மூதாட்டியை கத்தியால் வெட்டி நபை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரின் சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் மேலூர் சிவகங்கை சாலையில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று வீட்டில் இருந்து மதியம் தொழுகைக்காக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.

அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் 35- 40 வயது மதிக்கதக்க வந்த இரண்டு மர்மநபர்களில் ஒருவர், காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த ஷாஜகானின் மனைவி ஆமீனாபீவியிடம் (வயது 60) பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளார்.

இதில் ஆமீனாபீவியின் வலது கைபெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆமினாபீவியின் அலரல் சப்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது மருமகள் பயாஸ்பானு (வயது 35) ஓடிவரவே மர்ம நபர் அவரையும் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனால் சுதாரித்துக்கொண்டு அவர் தப்பிவிடவே மர்ம நபர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் சுவர் ஏறி குதித்து வெளியே காத்திருந்த மற்றொரு மர்மநபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வாளர் சார்லஸ் மற்றும் கிரைம் டீம் காவல்துறையினர் வீட்டில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து, இச்சம்பவம் நகை பறிப்பிற்காக நடைபெற்றதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும், தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில், சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த பெண்னை கத்தியால் தாக்கி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், காயமடைந்த ஆமினா பீவி, சிகிச்சைக்காக மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

Views: - 260

0

0