5 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி: தந்தை மற்றும் மகன் கைது…

Author: Udhayakumar Raman
29 June 2021, 9:58 pm
Quick Share

சென்னை: சென்னையில் 5 கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் சபாபதி குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது உறவினர்களான நாராயணன் மற்றும் பெருமாள் ஆகியோர்  பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியில் 4,500 சதுர அடி பரப்பளவில் வீடு மற்றும் காலிமனை வாங்கி அதை  ரங்கநாதனிடம் ஒப்படைத்து பராமரித்து வரும்படி கூறியுள்ளனர்.  ரங்கநாதன் அந்த வீட்டை தனது உறவினருக்கு வாடகைக்கு விட்டு இருந்ததாகவும் , அவரை ஏமாற்றி பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியை சேர்ந்த தந்தை மகன்களாகிய  செல்வநாயகம் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போலி பத்திரம் தயாரித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது ரங்கநாதன் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த இருவரும் மீண்டும் ரங்கநாதன் வீட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து ரங்கநாதன் நேற்று முன்தினம் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செம்பியம் ஆய்வாளர் துளசி மணி, செல்வநாயகம் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீதும் மீண்டும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Views: - 223

0

0