ஆட்டிசம் பாதித்த சிறுவன் அடித்துக் கொலை? பொள்ளாச்சி தனியார் மனவளம் குன்றிய குழந்தைகள் பள்ளியில் பயங்கரம்!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2025, 11:22 am
கோவை பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
அதன் உரிமையாளராக கவிதா, ஷாஜி, கிரி உள்ளிட்டோர் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு சுமார் 22 பேர் மனவளம் குன்றிய மற்றும் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்டவர்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகனான சுமார் 22 வயது இளைஞர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் உள்ளே சென்று காப்பகத்தில் உள்ளவர்களை சந்திக்கக் கூடாது என காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 15ஆம் தேதி காப்பகத்தில் இருந்த ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ரவிக்குமாரின் மகன் வருண் காணாமல் போனதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க சென்ற ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்களிடம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு காப்பகத்தில் உள்ள சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் அங்கு வைத்து வருணை காணவில்லை என்றும் காப்பக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காப்பக நிர்வாகிகள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
அதன் பேரில் ரவிக்குமார்,தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காணாமல் போன வருணை தேடிய போது அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
குறிப்பாக காப்பக நிர்வாகிகள் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட வருண் காணாமல் போனதாக கூறப்பட்ட 15ஆம் தேதிக்கு முன்பே காணாமல் போனதாகவும் காப்பகத்தில் அவரை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்ததாகவும் அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் கட்டில் ஆகியவற்றை வேறு அறைக்கு மாற்றியதாகவும் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் தனது உறவினரான நாகராஜிடம் இது குறித்து கூறவே ஏற்கனவே நாகராஜின் உறவினர் ஒருவரின் மகன் அதே காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட வந்த சூழலில் அவரும் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது இதேபோன்று பல மாணவர்களையும் காப்பக நிர்வாகிகள் மாலை வேலைகளில் அடித்து சித்திரவதை செய்ததாகவும் காணாமல் போன வருணை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதில் கால் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக ரவிக்குமார் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் ரவிக்குமார் தனது உறவினர்களுடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்கள், தொடர்ந்து காப்பக நிர்வாகிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதாகவும் வருண் கடுமையாக தாக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றது குறித்து காப்பக நிர்வாகிகளிடம் கூறி விசாரணையை துவங்கிய நிலையில் கடந்த மூன்று தினங்களாக காப்பக நிர்வாகிகளின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகளின் பேக்கப் இருப்பதாகவும் காப்பகத்தினர் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆழியாறு அணைக்கு அழைத்துச் சென்ற நாளில் வேறொரு சிறுவன் தூரத்தில் நடந்து செல்வதை போன்ற ஒரு சிசிடிவி காட்சியை அவர்கள் காண்பித்ததாகவும் ஆனால் அது காணாமல் போன வருண் இல்லை என்பது தெளிவாக உள்ளதாகவும் கூறிய அவர்கள், தங்கள் மகனை காப்பக நிர்வாகிகள் அடித்து சித்திரவதை செய்து கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன் தற்போது காப்பகத்தில் உள்ள மற்ற குழந்தைகளை மீட்குமாறும் காப்பகத்தை மூடி சீல் வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.