குற்றச்சம்பவங்களை தடுக்க ஆட்டோ ஓட்டுநர்களின் உதவி தேவை : கோவை காவல் உதவி ஆணையர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 7:26 pm
Cbe Auto -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகர போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் குற்ற சம்பவங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் காந்திபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.

கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையம் சார்பாக சென்ட்ரல் பேருந்து பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுடன் குற்றம் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ஆட்டோ டிரைவர்களிடம் கூறியதாவது:

நீங்கள் எப்பொழுதுமே மக்களோடு மக்களாக, மக்கள் கூடும் இடங்களில் இருக்கக்கூடியவர்கள்.
ஆதலால் சந்தேகப்படக் கூடிய நபர்கள், உங்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்கள், புதிய நபர்கள் இவர்களை உங்களால் எளிமையாக கண்டறிய முடியும்.

சந்தேகத்திற்கிடமாக யாரையாவது நீங்கள் பார்க்க நேரிட்டால், உடனடியாக காட்டூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் தடுப்பதில் ஆட்டோ டிரைவர்களும் எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குற்றசம்பவத்தை தடுப்பதற்கு காவல்துறை மட்டும் போதாது.

இந்த சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர் வெள்ளியங்கிரி மற்றும் காட்டூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.

Views: - 123

0

0