அயோத்தி ராமர் கோவில் பூஜை : தீவிரவாதிகள் அச்சுறுத்தல்.! தமிழக ஆலயங்களில் தீவிர சோதனை.!!
3 August 2020, 12:47 pmவிழுப்புரம் : அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளதையொட்டி தீவிர அச்சுறுத்தல்கள் காரணமாக விழுப்புரத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை சீர் குலைக்க தீவிர அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சந்தைப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடம் இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகரில் உள்ள பழமையான கோயில்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் பெருமாள் கோயிலில் மோப்ப நாய் தமிழ் உதவியுடன் காவல்துறையினர் மர்மப் பொருள்கள் ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தினர்.
அதேபோன்று, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வாகன நிறுத்துமிடம், காய்கறி சந்தைப் பகுதிகளிலும் மேப்பநாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் கொண்டு சோதனையிட்டனர்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். சாதாரண உடைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.