விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் : கடலில் நீராடி மாலை அணிவித்தனர்!!

16 November 2020, 12:24 pm
Ayyappan Devotees- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அய்யப்ப பக்தர்கள் கடலில் நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சீசன் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அய்யப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி இன்று சீசன் இல்லாததால் அமைதியாக காணப்பட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலையில் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது.கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று காலையில் உள்ளூர் அய்யப்ப பக்தர்கள் மட்டும் கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் திரண்டனர்.

அவர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில்  உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இதையொட்டி பகவதி அம்மன் கோவில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்குள்ள தர்மசாஸ்தா சன்னதியிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அந்த சன்னதியில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் ஸ்ரீனிவாசன் போற்றி, ஸ்ரீதர் போற்றி ஆகியோர் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.

 வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை முற்றிலும் இல்லாததால் கடற்கரை, காந்தி மண்டப சாலை, சன்னதி தெரு ,பஸ் நிலையங்கள் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறைமுக பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி ஆண்டு தோறும் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆண்டு ஒரு சில போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

Views: - 21

0

0