பாபர் மசூதி வழக்கில் நீதி, உண்மை வென்றுள்ளது : ஹெச்.ராஜா கருத்து!
30 September 2020, 5:46 pmமதுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை கோச்சடையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “இராமகோபாலன் 40 ஆண்டுகளாக இந்து முன்னணி அமைப்பை நிறுவி இந்துக்களுக்காக வாதாடி போராடியவர், அல்லும் பகலும் இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், இராமகோபாலன் மறைந்து விட்டார் என்கிற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது என்றார்.
ஒரு காலகட்டத்தில் இந்து சிலைகளை உடைப்பது, இந்துக்களை ஏளனமாக பேசுவது என்கிற நிலையை மாற்றியவர் இராமகோபாலன். 1964 ஆம் ஆண்டு முதல் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர், தனிப்பட்ட முறையில் இராமகோபாலனின் இறப்பு எனக்கு பேரிழப்பு.
இராமகோபாலன் இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பணியை மேற்க் கொண்டவர், அவரின் பணியை நாம் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
1992 ஆம் ஆண்டு விவாதத்திற்க்குள்ளான கட்டடம் இடிக்கப்பட்ட சதி வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது, இந்த வழக்கை சதி வழக்கு என நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை பொய் வழக்கின் மூலம் முடக்கி விடலாம் என காங்கிரஸ் கட்சி நினைத்தது. காங்கிரஸ் கட்சியின் எண்ணம் பொடி பொடியாக தகர்க்கபட்டது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயன்றும் அத்வானியின் ரத யாத்திரை கட்டட இடிப்புக்கு காரணமில்லை என நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
ஊடகங்களில் வந்த செய்தி அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைத்தும் பொய் ஆதாரங்களாக உள்ளது, மக்களுக்காக போராடும் தலைவர்களை முடக்கும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது, நீதி, உண்மை வென்றுள்ளது” என கூறினார்