மகாளய அமாவாசை: கோவையில் 4 முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு தடை…பக்தர்கள் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 1:21 pm
Quick Share

கோவை: நாளை மகாளய அமாவாசையையொட்டி கோவையில் உள்ள 4 முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கோவை மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

அதுவும் விசே‌ஷ தினங்களில் இந்த 4 கோவில்களிலும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறை தினங்களில் கோவில்களுக்கு சென்று சாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். நாளை மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள், நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதியில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Views: - 394

0

0