புதுச்சேரியில் பந்த் எதிரொலி : தனியார் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2021, 9:36 am
புதுச்சேரி : உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் வருகின்ற நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் குளறுபடி, சுழற்சி முறையில் வார்டு தேர்வு செய்ததில் தவறுகள், இட ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை, மழை மற்றும் பண்டிகை காலத்தில் தேர்தலை நடத்துவது, போன்ற குறைகளை உடனே நீக்கிய பிறகே தேர்தலை நடத்த வேண்டும், மாநில தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், இதனை கண்டுகொள்ளாத ஆளும் என். ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கப்படவில்லை. குறைந்த அளவிலான தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள், மற்றும் ஆட்டோ மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
முக்கிய வர்த்தக வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகள் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாலும், தனியார் பேருந்துகள் இயக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,
இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரி மாநிலம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் நகரப் பகுதிகளின் முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
0
0