இதுதா உங்க சட்டமா? முதல்வர் ஸ்டாலின் படத்துடன் உள்ள போஸ்டர்களை கிழித்த பாஜகவினர்… நள்ளிரவில் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 8:28 am
Cbe Poster - Updatenews360
Quick Share

கோவை-அவினாசி சாலையில் விதிகளை மீறி ஒட்டப்பட்டிருந்த திமுக சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு நள்ளிரவில் தாங்களாகவே அப்புறப்படுத்திய பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது,.

கோவை -அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால தூண்களில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் படம் பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே அந்த தூண்களில் எந்தவிதமான விளம்பரங்களோ அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளோ ஒட்டக்கூடாது என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் விதி மீறி திமுகவினர் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கட்டப்பட்டுள்ள தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை அடுத்து கடந்த வாரம் அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு கோவை மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அவை அப்புறப்படுத்தப்படாத நிலையில் நேற்று முன் தினம் இரவு பாஜகவினர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை படம் பொறித்த சுதந்திர தின வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்ட துவங்கினர்.

இதைத் தொடர்ந்து திமுகவினரும் அங்கு திரண்டு எதிர் முழக்கமிட்டு போராட்டத்த ஈடுபட்டதால் காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனு பெற்று கூட்டத்தை கலைத்தினர்.

இந்த சூழலில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து விதி மீறி ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காவல்துறையினர், தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுகவினரின் போஸ்டர்களுக்கு பாதுகாப்பு அளித்ததால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் நள்ளிரவு சுமார் 11:30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள சுமார் 7 தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுகவின் சுவரொட்டிகளை தாங்களாகவே கிழித்தனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுப்புகளை கொண்டு தடுக்கவே இரு தரப்பினரிடையே கைகலப்பு உருவானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் கைது செய்தனர்.

இதனிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்த கொடிசியா சந்திப்பிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கொடிசியா மைதானத்திற்குள் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது.


ஆனால் திமுகவினர் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருந்ததால் பாஜக- திமுக மோதல் தவிர்க்கப்பட்டது. அதே வேளையில் பாஜகவை சேர்ந்த நான்கு பேர் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு தூணில் ஒட்டப்பட்டிருந்த திமுக வினரின் சுவரொட்டியை கிழித்ததையடுத்து தகவலறிந்த திமுக வினர் அங்கு திரண்டு சுவரொட்டியை கிழித்த பாஜக தொண்டர் ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துடன் சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் வேறொரு சுவரொட்டியை ஒட்டினர்.

மேலும் அங்கு திமுகவினர் திரண்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் கொடிசியா சந்திப்பு பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 200 பேர் விதி மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தும் வரை கலைய மாட்டோம் என்று கூறி தொடர்ந்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த மூன்று தினங்களுக்குள் போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படும் எனவும் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்ததன் பேரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் அங்கிருந்த பாஜகவினர் கலைந்தனர்.

மேலும், மூன்று தினங்களுக்குள் விதிமீறி ஒட்டப்பட்ட திமுக போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படாத பட்சத்தில் வருகிற 16-ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்து சென்றனர்.

இரவு 10 மணிக்கு துவங்கிய பாஜகவினரின் போராட்டம் நள்ளிரவு ஒன்று முப்பது மணி வரை நீடித்ததால் கோவை -அவிநாசி சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Views: - 165

0

0