தேர்தல் முடியும் வரையாவது அந்தக் கட்சியில் இருப்பாரா அந்த வேட்பாளர்..? வானதி சீனிவாசன் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan1 April 2024, 9:17 am
ட்விட்டரில் பொய் பொய்யாக பதிவு போடுவது மட்டும்தான் கம்யூனிஸ்ட் எம். பி. சு. வெங்கடேசன் வேலையாக இருந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை பிஜேபி வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசனுக்கு, தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு, மதுரை விளக்குத் தூண் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிஜேபி தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஒரு கிருமி. குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு எம். பி. உங்களுக்கு வேண்டுமா? குற்றம் இல்லாததை குற்றமாகச் சொல்பவர் சு. வெங்கடேசன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக, மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன் களமிறக்கப்பட்டு இருக்கிறார். மதுரை எம்பியாக ராம சீனிவாசன் ஜெயித்தால், மதுரைக்கு பிரதமர் மோடியிடம் பேசி எத்தனையோ திட்டங்களை கொண்டு வர முடியும். கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசனை மீண்டும் எம். பி. ஆக்கினால் டிவிட்டரில் பொய் பொய்யாக பதிவு போடுவது மட்டும்தான் அவரது வேலையாக இருக்கும்.
சிறு குழந்தைக்கு கூடத் தெரியும், இந்தியாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கப் போவது பாரதீய ஜனதா கட்சி என்று! அன்னை மீனாட்சி அருளால், மீண்டும் பிரதமர் மோடி தான் பிரதமராகப் போகிறார். ஆட்சியே அமைக்க முடியாத, ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு கம்யூனிஸ்ட் எம்.பிக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?
அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தேர்தல் முடியும் வரையாவது அதே கட்சியில் இருக்க வேண்டும் என அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன். எந்த கட்சியின் மீதும் பற்று இல்லாமல், எந்த சித்தாந்தத்திற்கும் சொந்தமாக இல்லாமல், தனக்கு என்று எந்தக் கொள்கை பிடிப்பும் இல்லாமல் இருக்கின்ற டாக்டர் சரவணன் உங்களுக்குப் பாராளுமன்ற எம். பி. யாக வேண்டுமா?
இன்று இருக்கின்ற 3 கூட்டணிகளுக்கு மத்தியிலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி, செயல்படக் கூடிய பிரதமர், உலக அரங்கிலே இந்தியாவிற்கு என்று ஒரு கௌரவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்ற பிரதமர் மோடியின் பிரதிநிதியாக மதுரை எம்பி வர வேண்டுமா? என யோசித்துப் பாருங்கள்.
மக்கள் எளிதில் அணுகக் கூடிய நபராக, எந்தப் பிரச்சினை என்றாலும் வீடு தேடி வந்து உதவக் கூடிய, பேராசிரியர் சீனிவாசனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள், என வானதி சீனிவாசன் பேசி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.