பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தடை செய்யுங்க : மனிதனை மனிதனே சுமப்பது மனித விதி மீறல்… கருப்பு கொடி காட்டி போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 6:03 pm

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

மயிலாடுதுறையில் தொன்மையான தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆதீனகர்த்தரின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறவுள்ளது.

தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்வதற்கு தடை விதிக்கக் கோரி திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்று கோலாகலமாக பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகே கருப்புக்கொடி ஏந்தி தப்படித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதனை மனிதன் சுமப்பது மத உரிமை அல்ல, மனித உரிமை மீறல் என்றும் தருமபுர ஆதீனத்தில் பல்லக்கு விழாவை தடைசெய்யவேண்டும் ஆதீன மடத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விவசாயிகள் விடுதலை முன்னணி தமிழர் உரிமை இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இயக்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர்

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!