கோவையில் 2.49 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி : மாவட்ட ஆட்சியர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2022, 1:55 pm
Cbe Booster Vaccine - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரம். இதில், தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள் 27 லட்சத்து 90 ஆயிரம். இதில், முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 27 லட்சத்து 51 ஆயிரம் பேர் , இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 22 லட்சத்து 54 ஆயிரம் பேர் ஆவர்.

தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் ஒரு முன்னோடி மாவட்டமாக கோவை உள்ளது. தற்போது 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. 97 ஆயிரத்து 404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 27 ஆயிரம் இளைஞர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய உள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இன்று முன்கள பணியாளர், மருத்துவ அலுவலர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஆகியோருக்கு 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இதில், மருத்துவ பணியாளர்கள் 85 ஆயிரத்து 554, முன்கள பணியாளர்கள் 91 ஆயிரத்து 762 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 72 ஆயிரம் பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்தில் இந்த மாதம் 70, 955 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இன்று கோவை அரசு மருத்துவமனையில் துவங்கிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசு மருத்துவமனை டீன், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் செலுத்தி உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

கோவையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டிரெண்ட் இங்கேயும் உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்.

முடிந்தால் இரண்டு முக கவசம் அணியலாம். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். மாவட்டத்தில் 9 ஆயிரத்து 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோவிட் சிகிச்சை மையங்களில் 4,300-க்கு மேற்பட்ட படுக்கை வசதிகளும், 5,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 128 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

மருத்துவமனையில் அட்மிஷன் குறைவாக இருந்தாலும் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசின் நெறிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த பகுதியில் கூடுதல் பேருந்துகள் போக்குவரத்து துறை இயக்க நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்கள் பயணிக்க அனுமதி இல்லை. அரசு அலுவலகங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு 30 இடங்களில் அதிகரித்து உள்ளது. இங்கு வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் முகாம் நடத்தப்படுகிறது .

இந்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் அரசின் உத்தரவை அடுத்து கட்டுப்பாடுடன் நடத்தப்படும். ஒமிக்கிரான் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் முன்கூட்டியே கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

பாலக்காடு கலெக்டரிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். அங்குள்ள பாதிப்பு குறித்தும் கேட்டு வருகிறோம். தொற்று அதிகம் உள்ள 96 இடங்கள் சிறிய பாதுக்காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த 6 ஆயிரம் பேரில் 4 பேருக்கு ஒமிக்கிரான் ஏற்பட்டுள்ளது. 96 பேருக்கு எஸ் ஜீன் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஒமிக்ரானுக்கு என தனி வார்டுகள் அரசு, இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் படி இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆரோக்கியமாக உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

அதன்படி, 88 சதவீதம் பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் தேவையின்றி அட்மிஷன் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 32 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 500 பேர் அடங்கிய முன்கள பணியாளர்கள் உள்ளனர். சுமார் 1020 பேர் தற்போது வீட்டில் தனிமையில் உள்ளனர். தொற்று ஏற்படும் பலர் 5 நாளில் குணமடைந்து விடுகிறேன். எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை. கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 162

0

0