‘சத்தியமா உங்களுக்கு தான் ஓட்டு போட்ட’: வாக்குச்சீட்டுக்கு பதிலாக பூத் ஸ்லிப்…வடிவேலு பட பாணியில் நடந்த காமெடி..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 4:27 pm
Quick Share

திருப்பத்தூர்: திரைப்பட பாணியில் வருவது போல பூத்சிலிப்பை வாக்குப்பெட்டியில் போட்டுவிட்டு வாக்குசீட்டை எடுத்துச் சென்ற சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குகளை வெள்ளை நிற வாக்குச் சீட்டிலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டிலும், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் பதவிக்கு பச்சை நிறவாக்குச் சீட்டிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டிலும் வாக்களிக்க வேண்டும்.

இந்நிலையில், திருப்பத்தூரில் கெஜல்நாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டியை திறந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த வார்டில் வாக்களித்த இருவர் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக பூத் சிலிப்பை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரி பூத் சிலிப்பை காட்டினார்.

மேலும், அவர் கூறுகையில், சினிமா படத்தில் வருவது தாங்கள் இருவரும் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என காண்பிப்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதே போல திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

திரைப்படத்தில் வாக்கு செலுத்திவிட்டு வரும் நபரிடம் நீ யாருக்கு ஓட்டு போட்ட என வடிவேலு கேட்க, அதற்கு அவரோ உங்களுக்கு தான் போட்டேன் என சொல்வார். அதற்கு வடிவேலு நான் நம்ப மாட்ட என்று சொன்னவுடன், நீங்க நம்ப வேண்டும் என்பதற்காக தான் வாக்குச்சீட்டை கையோடு கொண்டு வந்தேன் என காட்டுவார். அதேபோல நிஜத்திலும் நடந்துள்ளது.

Views: - 447

0

0