போதை ஊசி போட்டு சிறுவன் பலி… பின்னணியில் பெரிய நெட்வொர்க்? பகீர் கிளப்பும் அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 4:17 pm

சென்னை புளியந்தோப்பு மன்னார் சாமி தெரு டிக்காஸ் ரோட்டை சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மகன் ஜாகீர். 17 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

பின்னர் படிப்பை தொடராமல் கடந்த 6 மாதங்களாக எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜாகீர் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளான்.

இதைத்தொடர்ந்து நேற்று பாரிமுனையில் உள்ள 17 வயது நண்பன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது ஜாகிர் உள்பட நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து போதை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ஜாகிர் ஊசி செலுத்திக்கொண்ட பிறகு சாலையில் நடந்து வந்தபோது மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த நண்பன் ஒருவன் ஜாகிரை மீட்டு மோட்டார் சைக்கிளில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் கையில் போதை ஊசி போட்டுக் கொண்ட அடையாளங்கள் இருந்தது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து எக்ஸ்பிளனேடு போலீசார் சிறுவனின் நண்பர்களிடம் போதை ஊசி எப்படி கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினீர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க: புனே PORSCHE கார் விபத்தில் திடீர் ட்விஸ்ட்.. 17 வயது சிறுவனின் தாத்தா கைது.. அதிர வைத்த காரணம்!!

சென்னையில் போதை ஊசி நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பல உயிர்கள் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் 17 வயது சிறுவனும் தற்போது உயிரிழந்துள்ளான். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கு போதை ஊசியை விற்பனை செய்த போதை ஊசி கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!