விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தாக்கிய சிறுத்தை..! சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை…

Author: kavin kumar
20 January 2022, 9:45 pm
Quick Share

கோவை : வால்பாறையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீரஜ் . இவரது மகன் தீபக் (11) இன்று மாலை இவரின் குடியிருப்புக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை சிறுவன் தீபக்கை பிடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அருகிலிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களை எடுத்து சிறுத்தையை நோக்கி சத்தம் போட்டு எறிந்துள்ளனர். இதனால் சிறுத்தை சிறுவனை மீண்டும் தாக்காமல் பயந்து அங்கிருந்து ஓடி மறைந்துவிட்டது.

இந்நிலையில் சிறுத்தை தாக்கியதில் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள தீபக்கை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, அதற்கான மேல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நல்லகாத்து எஸ்டேட் பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 188

0

0