போலி வேலைவாய்ப்பு அலுவலகம்….வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: கோவையில் அண்ணன்-தம்பி கைது!!

2 July 2021, 12:42 pm
Quick Share

கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி கோவையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, பல இளைஞர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த சகோதரர்கள் இருவரை, கேரளா போலீசார் கைது செய்தனர். கோவை, பீளமேட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன்கள் உதயசங்கர் மற்றும் பிரதீப்சங்கர். இவர்கள் இருவரும் கோவை, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு இடங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களை நடத்தி வருகின்றனர்.

துபாய், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக விளம்பரப்படுத்தினர். இதை நம்பி இளைஞர்கள் பலர் இவர்களை அணுகினர். அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றவர்கள், வேலை எதுவும் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனையடுத்து, பணம் கொடுத்த இளைஞர்கள் பணத்தை திருப்பி கேட்டதால், அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இவர்களிடம், நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் திருச்சூர், மாளா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனையடுத்து, கேரள போலீசார் நேற்று கோவை வந்தனர்.

கோவை போலீசார் உதவியுடன் உதய்சங்கர், பிரதீப் சங்கரை கைது செய்து கேரளா அழைத்து சென்றனர். இவர்களிடம், நுாற்றுக்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். கைது செய்யப்பட்ட உதய்சங்கர் முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாம் திருமணம் செய்ததாக கோவை அனைத்து மகளிர் மத்திய பகுதி போலீசில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 164

0

0