பிஎஸ்பி கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 4 ரவுடிகள் கைது… விசாரணையில் வெளியான தகவல்..!!!

Author: Babu Lakshmanan
23 October 2023, 7:47 pm
Quick Share

திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் பொன்மலை அடுத்துள்ள கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருக்கிறது. இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது. பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதற்கு இடையில் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் ராகுல் (22), குணசேகரன் என்பவரது மகன் சச்சின் (24), ராஜசேகர் என்பவரது மகன் ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழ கல்கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் லோகேஷ் (23) ஆகிய நான்கு பேரையும் திருவெறும்பூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர்கள் அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை கொண்டு ரவிச்சந்திரன் வீட்டில் அடித்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது, வீட்டின் அருகில் உள்ள பழக்கடையில் தினமும் மாலை நேரங்களில் இவர்கள் நான்கு பேரும் அமருவதாகவும், இதனை ரவிச்சந்திரன் கண்டித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். கைதான 4 பேர் மீதும் பல்வேறு அடிதடி மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். கட்சித் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 375

    0

    0