முட்டைக்கோஸ் விலை கடும் சரிவு : தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!!

5 February 2021, 3:41 pm
cabbage Rate - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளில் முட்டைகோஸ் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் மலைப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று மாத பயிரான முட்டைக்கோஸ் தற்போது விலை குறைந்து கிலோ ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் என கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

நாத்து நடுதல், களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை உள்ளிட்ட வேலைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் வரை முதலீட்டு செலவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கோபி, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு ஆகிய நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகள் முட்டை கோஸ்களை கொள்முதல் செய்து விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ஒன்று 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், கடந்த சில நாட்களாக கடும் விலை சரிவு ஏற்பட்டு கிலோ ஒன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 15 டன் அளவிற்கு உற்பத்தியாகும் முட்டைகோஸ் விற்பனை செய்யப்படும் போது, ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே கிடைப்பதாகவும், இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு உரிய மானியம் வழங்கி தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 41

0

0