“மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியல“ : குடும்பத்தை ஏமாற்றிய நெசவாளர்!!

19 September 2020, 3:52 pm
Weaver Suicide - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கொரோனா முடக்கத்தால் பட்டு நெசவு தொழில் முடங்கி போனதால் மகளின் கல்விச் செலவுக்காக பணம் இல்லாத காரணத்தால் நெசவாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் நகர் பட்டு சேலைக்கு உலகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரம் நகரில் அரசு மற்றும் தனியார் பட்டு ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பட்டு சேலை வாங்கி செல்வது வழக்கம்.

காஞ்சிபுரம் காமராஜ் சாலை, நடுத்தெரு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக பட்டு சேலை விற்பனையகங்கள் உள்ளன. முகூர்த்த நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் கோடிக்கணக்கில் பட்டு வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக காஞ்சிபுரத்திற்கு வரும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே பட்டு நெசவாளர் சங்கர் என்பவர் அதீத வறுமை காரணமாக வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கரின் மகனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவராலும் பணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் பண நெருக்கடி மிகவும் அதிகமாக இருந்தது.

மேலும் அவரது மகள் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் படிப்பிற்கு நடப்பாண்டுக்கு பணம் கட்ட கையில் பணமில்லாத காரணத்தினால் மிகுந்த மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும் சங்கர் வெளி நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகள் அதிக அளவு தேக்கமடைந்து உள்ளதனால் நெசவாளர்களுக்கு புதிய பட்டுப்புடவைகளை நெசவு செய்ய ஆர்டர் கொடுப்பதில்லை.

இதனால் பெரும்பாலான நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் சங்கர் எந்த ஒரு வருமானமும் இல்லாத காரணத்தினாலும் கடன் வாங்கியவர்களுக்கு கடன் கொடுக்க வழியும் இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நெசவாளர் சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சங்கரின் மகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அதீத வறுமை காரணமாகவும் அதனால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாகவும் மனமுடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார் . புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா பொது முழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் மிகுந்த வாழ்வாதார சிக்கலில் சிக்கி வந்து கொண்டிருக்கும் சூழலில் நெசவாளர் சங்கர் உயரிழப்பு நெசவாளர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.