வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது : தமிழக சிறப்பு டிஜிபியின் பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 12:42 pm
தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றட்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,”காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் டிஜிபிக்கு எதிராக செயல்படுகிறார்கள்”, என்ற குற்றச்சாட்டை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழக சிறப்பு டிஜிபியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்திருந்தார் .
எனவே,அவர்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து,தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் : பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ள டிஜிபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல,அவை மிகவும் தீவிரமானவை. எனவே,இந்த வழக்கு விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து,இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள்,பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்,சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த புகார் தொடர்பான கண்காணிப்பை செய்யக்கூடிய முடிவையும் ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.
0
0