கோவையில் சாமி சிலைகள் சேதம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2025, 10:27 am
கோவை, நீலாம்பூர், கரையம்பாளையம் சந்திப்பில் அமைந்து உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் வினாயகர், மூஞ்சூரு, ராகு மற்றும் கேது சிலைகள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்க: ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு.. புல்லட் துளைக்காத கார் பறிமுதல்..!
இதுகுறித்து அந்தக் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் சண்முகம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் சம்பவம் நடைபெற்ற தேதியில் தொலைபேசி உரையாடல்கள் விவரங்கள் (CDR) மூலம் சேகரித்து விசாரணை நடத்திய போது சந்தேகப்படும்படியான நபரின் இருப்பிடம் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடையவர் பீகார் மாநிலம், நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த கரன்குமார் (வயது 32), தற்போது தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கல்லகல் பகுதியில் வசித்து வந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அவரை தனிப்படையினர் கைது செய்து சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அதில் அந்த நபர் தான் மதுபோதையில் தெரியாமல் செய்து விட்டதாக ஒப்புக் கொண்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.